யாழ்ப்பாணம் கொடிகாமம்-வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய சிலுசன் குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நண்பருடன் வெளியே சென்ற சிலுசன், பின்னர் மற்றொரு நண்பருடன் கோவில் அருகிலுள்ள கேணிக்கு சென்றுள்ளார். அங்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக யாரும் குளிக்காத அந்த கேணியில் தாமரை கொடி சிக்கி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய்யென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் நேரில் வந்து குளத்தை பரிசோதித்தபோது, எந்தவிதமான ஆபத்தும் அங்கு இல்லை என்பதும், பாதிப்பின்றி இருவரும் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது. சிலுசனின் சேட்டு மற்றும் செருப்பு குளத்தின் கரையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மரண அறிக்கையில் மதுபானம் இல்லை என்றும், தண்ணீர் சுவாசப் பையை அடைத்ததால் மரணம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் தோளில் கண்டல் காயம் காணப்பட்டதோடு, சடலம் இருந்த இடத்தில் ஒரு நீளமான கட்டை இருந்ததாகவும் உறவினர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், வைத்தியசாலையில் அவரை சேர்ப்பித்தவர்கள் பொய்யான பெயரை பயன்படுத்தியதாகவும், சில சந்தேகங்களுக்கு காரணமான நடப்புகள் இருந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவரது கைபேசியில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டதோடு, நண்பர்கள் யாரும் இதுவரை சடலத்தை பார்ப்பதற்கோ வீட்டிற்கு வராதிருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது.
இந்த மரணம் தொடர்பாக நால்வர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், சிலர் இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு, உண்மை வெளிப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
0 Comments